புதன், 24 ஆகஸ்ட், 2016

மண் மணக்கும் மதுரை சாம்பார் (சாதத்திற்கு சாப்பிடுவது) செய்வது எப்படி ? விளக்கவுரை !!







                  மதுரை சாம்பார் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய இந்த 
வலைதளத்தின் பெரும்பாலான அன்பு  
ரசிகப்பெருமக்களிடம் இருந்து வந்திருந்த 
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இன்று 
"மணமணக்கும் மதுரை சாம்பார் " செய்வது 
எப்படி என்று இங்கே விளக்கமாக எழுதி 
இருக்கின்றேன். அதை சமைத்துப்பார்த்து 
நீங்களும் அதன் சுவைக்கு, ருசிக்கு, அடிமை 
ஆகிடவேண்டும் என்று வாழ்த்தி, உங்கள் 
முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன்.

************************************************************************************************************


                   மதுரை சாம்பார் !!


தேவையான பொருட்கள் :-

புளி நெல்லிக்காய் அளவு, துவரம்பருப்பு அரைக்கால் படி ( 2௦௦ கிராம்) MTR சாம்பார் பொடி 3 கரண்டி, மிளகாய் தூள் 2 கரண்டி, மஞ்சள் தூள் 2 கரண்டி, பெருங்காயத்தூள் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, தக்காளி 1,பச்சை மிளகாய் 6 நெட்டு வசத்தில் கீறியது ,முருங்கை  
காய் பத்து துண்டுகள்,சின்ன வெங்காயம் தோல் உரித்தது 11,1 பெரிய வெங்காயம் தோல் உரித்து நெட்டு வசத்தில் நறுக்கியது, உருளைக்கிழங்கு 1, 1 காரட் வட்ட வடிவமாக நறுக்கியது, 2 பீன்ஸ் ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கியது,1அவரைக்காய் 
அதே அளவில்நறுக்கியது,கடுகு,உடைத்த உளுத்தம் பருப்பு, வெந்தயம், தாளிக்க நல்லெண்ணெய் தேவையான அளவு.தாளிக்க 
கருவேப்பிலை,கொத்தமல்லி தளைதேவையான அளவு, துருவிய தேங்காய் 3 கரண்டி.காய்ந்த சம்பாமிளகாய் வற்றல் (நீளமான)3.



செய்முறை :-  முதல்நாள் இரவில் நெல்லிக்காய் அளவு புளி, அரைக்கால் படி துவரம்பருப்பு இவைகளை தனித் தனியே நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும். 

பின்பு காலை ஊற வைத்திருந்த புளியை நன்கு அழுத்தி கரைத்து அதன் வடிசலைத்தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பிறகு ஊற வைத்திருந்த துவரம்பருப்பையும், உருளைக் கிழங்கு ஒன்றையும் குக்கரில் வேறு வேறு பாத்திரத்தில் வைத்து 3 விசில், 15 நிமிடம் அடுப்பை மினிமம் சூட்டில் வைத்து பின் அடுப்பை அணைத்து ஆற விடவும். 

அதன் பின்பு புளி கரைசலில் சாம்பாருக்குத் தேவையான அளவு உப்பு, 3 கரண்டி MTR சாம்பார் பொடி, 2 கரண்டி மிளகாய்த்தூள், 2 கரண்டி மஞ்சள்தூள்,சிறிது  பெருங்காயத்தூள்,போட்டு, கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து கரைசலை 
எடுத்து வைத்துக்கொள்ளவும். 

அதன் பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அது நன்கு சூடானவுடன் அதில் மூன்று முதல் நான்கு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதுவும் சூடானபின்பு அதில் கடுகு நன்கு பொரிந்த பின், 
உடைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயம் சிறிதளவு இவைகளை போட்டு சிறிது பெருங்காயத்தூள் தூவவும். அதன் பிறகு கருகப்பிலை இலைகளை அதில் போட்டு பின் 3 காய்ந்த மிளகாய் வற்றலை போடவும். அதன் பிறகு நெட்டு வசத்தில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்,நான்கு துண்டுகளாக நறுக்கிய தக்காளி, பெரிய,சிறிய 
வெங்காயம், காரட் உள்ளிட்ட காய்கறிகள், வேகவைத்து தோல் உரித்து எட்டு துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கு, இவைகளையும் போட்டு 2 கரண்டி நல்லெண்ணெய் இந்தக் காய்கறி மீது ஊற்றி, நன்றாக கிண்டி அதனை 
எண்ணையில் நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்  நிறமாக ஆனவுடன், சாம்பார் பொடி புளி கரைசலை வாணலியில் ஊற்றவும். நன்றாக கொதிக்க விடவும். முருங்கைக்காய்நன்கு வெந்தவுடன்  அதில் வேகவைத்து ஆறிய துவரம் பருப்பை நன்கு மசித்து, அதில் துருவிய தேங்காய் தூளை போட்டு, கொதித்துக்கொண்டு இருக்கும் சாம்பாரில் போடவும். அதில் தேவையான அளவு கொத்தமல்லி தளையையும் போட்டு, உப்பு, உரைப்புசரிபார்த்து இறக்கியபின்பு மேலும் கொஞ்சம் கொத்தமல்லி இதழ்களை தூவவும். இப்போது சுவையான மணமணக்கும் 

           " மதுரை சாம்பார் "  


உங்கள் நாவின் ருசிக்காகக் காத்திருக்கிறது. 

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R. பாலு. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக